தஞ்சையில் நடந்த சர்க்கரை கழக பேரவை கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

நிலுவைத்தொகை ரூ.30 கோடி வழங்கக்கோரி தஞ்சையில் நடந்த சர்க்கரை கழக பேரவை கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-12-06 22:30 GMT
தஞ்சாவூர், 

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சர்க்கரைதுறை ஆணையர் ரீட்டா ஹரீ‌‌ஷ் தக்கர் தலைமை தாங்கினார். கலெக்டர்கள் கோவிந்தராவ்(தஞ்சை), உமாமகேஸ்வரி(புதுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கரும்பு விவசாயிகள், நிலுவைத்தொகை ரூ.30 கோடி வழங்காததை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பியதுடன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் பல்வேறு கோ‌‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக அனுப்பப்பட்ட கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலை டன் ஒன்றுக்கு ரூ.900 வழங்க வேண்டும்.

பல டன் கரும்புக்காக ரூ.30 கோடி வரை நிலுவைத்தொகை வழங்கப்பட வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தான் வெளிநடப்பு செய்தோம்.

ஆலையை குறித்த காலத்தில் திறக்காததால் இழப்பு ஏற்படுகிறது. பிற இடங்களில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையில் பணி புரிந்த பணியாளர்கள் குருங்குளம் சர்க்கரை ஆலையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதுவும் ஆலையை மூடுவதற்கான முயற்சியா? என சந்தேகம் ஏற்படுகிறது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்க்கரை ஆலை பணியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆலையில் அரவை பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அரவை தொடங்கப்பட வேண்டும் என்றனர்.

பின்னர் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும்போது, கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் பெற்றுத்தர வேண்டும். சொட்டுநீர் பாசனம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இன்றி 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். ஆலையின் நலன் கருதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை தஞ்சைக்கு மாற்ற வேண்டும். ஆலை குடோனில் இருக்கும் சர்க்கரையை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் அறிவிக்க வேண்டும். ஆலையில் ஊழல் செய்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

ஆணையர் ரீட்டா ஹரீ‌‌ஷ்தக்கர் பேசும்போது, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ஊழல் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தங்களது ஆதங்கத்தை விவசாயிகள் தெரிவித்தனர். அது நியாயமான ஆதங்கம் தான். இந்த ஆதங்கமானது எங்களையும் தாக்கும். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ரூ.2 கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக 133 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை 2-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஆஜராக வருகிற 10-ந் தேதிக்குள் சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். விசாரணையின் நிலையை தொடர்ந்து கண்காணிப்போம்.

தமிழகத்தில் 5 லட்சம் கரும்பு விவசாயிகள் உள்ளனர். தமிழகத்தில் 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் 100 சதவீதம் அரவை பணி நடைபெற 3 லட்சம் எக்டேர் கரும்பு தேவை. ஆனால் 1 லட்சம் எக்டேருக்கும் குறைவாக தான் கரும்பு அரவைக்கு வருகிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றார்.

கூட்டத்தில் பொதுமேலாளர் விஜயா, நிதித்துறை இணை இயக்குனர் பாலாஜி, தொழில்துறை துணை இயக்குனர் சரவணகுமார், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மங்களம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்