தீக்குளிக்க முயன்ற வாலிபர், பெண் கைது - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர், பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-09 22:15 GMT
கடலூர்,

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தவிர கலெக்டர் அலுவலக வளாகத்திலும் இது பற்றிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

இருப்பினும் இதை அறியாமல் தொலைதூரங்களில் இ்ருந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இது பற்றிய விவரத்தை அறிந்ததும் அங்குள்ள பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஈஸ்வரகண்ட நல்லூரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 28) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்தார்.

அப்போது கலெக்டரும் அங்க காரில் வந்து இறங்கி, அலுவலகத்துக்குள் சென்றார். அந்தசமயத்தில் திடீரென மணிகண்டன் தான் கையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை அறிந்த போலீசார், உடனே அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

பின்னர் அவரை போலீசார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், நெய்வேலி என்.எல்.சி. இ்ந்தியா நிறுவனத்தில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி கீழக்கொல்லையை சேர்ந்த ஒருவர் தன்னிடம் ரூ.4 லட்சம் கேட்டதாகவும், அதன்பேரில் தான் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டதாகவும், இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறினார்.

இதனால் தான் பணம் கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆபத்தான பொருளை வைத்திருந்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் மேலும் ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதன் விவரம் வருமாறு:-

புவனகிரி தாலுகா நத்தமேட்டை சேர்ந்தவர் பாலமணி. இவருடைய மனைவி சிங்காரி (50). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பற்றி அறிந்ததும் அவரை புதுநகர் போலீசார் மீட்டனர். இது பற்றி அவர் கூறுகையில், சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட நான், கோர்ட்டில் நஷ்ட ஈடு கேட்டு இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் எனக்கு ரூ.24 லட்சத்து 45 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகை இது வரை எனக்கு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் தீக்குளிக்க முயற்சி செய்தேன். ஆகவே அந்த தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

இதையடுத்து அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்