ஊராட்சி தலைவர் பதவி ரூ.32 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதா? அதிகாரிகள் விசாரணை

ஒரத்தநாடு அருகே ஊராட்சி தலைவர் பதவி ரூ.32 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-11 22:15 GMT
ஒரத்தநாடு,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பதவிகளுக்கான தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிகாரிகள் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது.

இதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் அதிகாரிகள் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். இதில் திருமங்கலக்கோட்டை கிழக்கு ஊராட்சி தலைவர் பதவி பெண்(பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.32 லட்சத்துக்கு ஏலம்?

இந்த பதவிக்கு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் அந்த ஊரில், ஊர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமங்கலக்கோட்டை கிழக்கு ஊராட்சி தலைவர் பதவி, ஊரின் பொது வளர்ச்சிக்கு யார் அதிகபடியான பணம் தருவதாக ஏலம் கேட்கிறார்களோ? அவர்களுக்கு தரப்படும் எனக்கூறி ஏலம் நடைபெற்றதாகவும், இந்த ஏலத்தில் அதிக தொகையாக ரூ.32 லட்சம் தருவதாக கூறிய ஒரு நபருக்கு ஊராட்சி தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்து இருப்பதாகவும் செய்தி பரவியது.

இந்த பரபரப்பான தகவலை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை போலீசார் திருமங்கலக்கோட்டை கிழக்கு பகுதிக்கு சென்று ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக ஏலம் விடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்

அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) கிரு‌‌ஷ்ணமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு ஊராட்சி தலைவர் பதவி ரூ.32 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் எங்களுக்கு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஊராட்சி தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் வகையில் ஊர் கூட்டம் நடைபெற்றது உண்மைதான் என்றும், அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக ஏலம் எதுவும் விடப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

திருமங்கலக்கோட்டை கிழக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று(11-ந் தேதி) வரையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

ஒரத்தநாடு அருகே ஊராட்சி தலைவர் பதவி ரூ.32 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக பரவிய தகவல் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்