கும்மிடிப்பூண்டி அருகே, வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.73 ஆயிரம் மோசடி - வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.73 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-11 22:30 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள துராபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). எலக்ட்ரீசியன் இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒருவர் உங்கள் வளர்ச்சிக்காக எங்கள் நிறுவனம் மூலம் தங்களுக்கு வங்கியில் இருந்து ரூ.8 லட்சம் கடன் வாங்கி தருகிறேன் எனவும் அதற்குரிய நடைமுறை விசாரணைகள் முடிந்தவுடன் கடன் தொகை உங்களது வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரே தனியார் வங்கியின் பெயரை சொல்லி பெண்கள் உள்பட பலர் ரமேஷிடம் செல்போனில் பேசி உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு பேசிய நபர்களின் பேச்சு திறமையால் கவரப்பட்ட ரமேஷ், சிறுக, சிறுக அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.73 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் இதுவரை செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னரும் மீ்ண்டும் ஒரு கணிசமான தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும் என தொலைபேசியில் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு ரமேஷால் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்தநிலையில், தனியார் வங்கியில் கடன் வாங்கி தருவதாக செல்போனில் கூறி பண மோசடி செய்ததாக சென்னை பெரம்பூர் செம்பியத்தில் வசித்து வரும் விருதாச்சலத்தை சேர்ந்த பற்குணன் (30) என்பவரை ஆரம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 3 பெண்கள் உள்பட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்