குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; ஐ.பி.எஸ். அதிகாரி ராஜினாமா

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா செய்தார்.

Update: 2019-12-12 22:45 GMT
மும்பை,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவையிலும், புதன்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அப்துர் ரகுமான் தனது பணியை ராஜினாமா செய்து உள்ளார். இவர் 1995-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர். மாநில மனித உரிமை கமிஷன் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த இவர், தனது ராஜினாமா கடிதத்தை மாநில உள்துறை தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

இது குறித்து அப்துர் ரகுமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த மசோதா அரசியலமைப்பு மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. சாதி, மதம் அடிப்படையில் இது நாட்டை பிளவுப்படுத்தும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்பட ஒடுக்கப்பட்ட சமுதாயம், ஏழைகளுக்கு இந்த மசோதா தீங்கு விளைவிக்கும். எனவே ஜனநாயக பாதையில் இந்த மசோதாவை எதிர்க்கும்படி இந்த பிரிவினரை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் வளமான, ஒன்றுப்பட்ட இந்தியாவை விரும்பும் சகிப்புத்தன்மை, மதசார்பின்மை பார்வை கொண்ட சகோதர, சகோதரிகள் மற்றும் நீதியை நேசிக்கும் இந்து சகோதரர்கள் இந்த மசோதாவை எதிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதில் தெளிவாக உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15, 25-வது விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த மசோதா ஆகியவற்றை ஒன்றாக அமல்படுத்தினால், முஸ்லிம் அல்லாத மக்கள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய இயலாமல், அவர்கள் அகதிகளாக அறிவிக்கப்பட்டு, குடியுரிமையை பெற்று விடுவார்கள். ஆனால் குடியுரிமையை நிரூபிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் நெருக்கடி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்