அன்னவாசல் அருகே தேர்தல் தகராறில் வேட்பாளருக்கு கத்திக்குத்து

அன்னவாசல் அருகே தேர்தல் தகராறில் வேட்பாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2019-12-31 23:00 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் முதற்கட்ட தேர்தலின்போது அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரம்பூர் ஊராட்சி பகுதியில், பூத் சிலிப் வழங்குவதில் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளருமான அன்சாரி (வயது 25) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இந்நிலையில் அது தொடர்பாக நேற்று மாலை அன்சாரியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று, அதே பகுதியை சேர்ந்த ராஜா உள்ளிட்ட சிலர் அன்சாரியை கத்தியால் கழுத்தில் குத்தி உள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இதை தடுக்க வந்த அன்சாரியின் உறவினரான ஜாகிர் மீது கத்தி பட்டதில் அவர் காயமடைந்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்