கோவில்பட்டியில் பரிதாபம்: திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

கோவில்பட்டியில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-01-08 23:00 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனம் மகன் ராமசாமி (வயது 33) தச்சு தொழிலாளி. இவருக்கும், கோவில்பட்டி வள்ளுவர் நகர் 2–வது தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் பங்கஜ லட்சுமிக்கும் (31) கடந்த செப்டம்பர் மாதம் 11–ந் தேதி திருமணம் நடந்தது.

பின்னர் பங்கஜ லட்சுமி தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராமசாமிக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை என்றும், அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் பங்கஜ லட்சுமி தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராமசாமி பெங்களூருக்கு வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ராமகிருஷ்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவருடைய மனைவி சுப்புலட்சுமி, தூத்துக்குடியில் உள்ள மற்றொரு மகளை பார்ப்பதற்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் பங்கஜ லட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த ராமகிருஷ்ணன் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தார். அப்போது பங்கஜ லட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த பங்கஜ லட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்