ஊத்தங்கரை அருகே, டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2020-01-09 03:45 IST
ஊத்தங்கரை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ளது மகனூர்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக ராஜன் (வயது 48) என்பவர் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜன் வழக்கம் போல கடையை மூடிவிட்டு ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 210-ஐ எடுத்துக் கொண்டு தனது 3 சக்கர மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதர் மறைவில் இருந்து திடீரென மர்ம நபர்கள் கத்தி மற்றும் கட்டைகளுடன் வந்து ராஜனை வழிமறித்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்களை கண்டவுடன் ராஜன் மொபட்டை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கட்டையால் ராஜனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இதனால் பணம் தப்பியது. இதைத் தொடர்ந்து அவர் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜன் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்