ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று மாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.;

Update:2025-12-14 19:58 IST

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் பல மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும், குழந்தைகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள போண்டி கடற்கரை பூங்காவில் நடைபெற்ற யூத மதப் பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மற்றொருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலத்தின் கீழ் ஒரு வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். இந்திய மக்களின் சார்பாக, தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்