சிவசேனா பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

மும்பை விக்ரோலி தாகுர்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஜாதவ்(வயது55). சிவசேனா கட்சி பிரமுகரான இவர், சம்பவத்தன்று காலை தன் வீட்டருகே உள்ள சாய்நாத் கோவிலுக்கு வந்திருந்தார்.

Update: 2020-01-08 23:19 GMT
மும்பை,

சந்திரசேகர் ஜாதவை, அப்போது அங்கு வந்த 2 பேர்,  4 முதல் 5 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சந்திரசேகரின் தோள்பட்டை மற்றும் கைகளில் தோட்டா துளைத்தது. எனினும் அவர் படுகாயத்துடன் உயிர்தப்பினார்.

இதனைக்கண்ட அவரது மகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பிஓடிவிட்டார். பின்னர் பிடிபட்டவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவரது பெயர் அபய் விக்ரம் சிங் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய உதய் ஷெட்டி என்பவர் பெங்களூருவுக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இந்தநிலையில் அவர் நவிமும்பை கோபர்கைர்னே பகுதிக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உதய் ஷெட்டியை கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்