நான் பதவி விலகினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? கெஜ்ரிவால்

நான் தற்போது பதவி விலகினால் தவறான முன் உதாரணமாகிவிடும். அது தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில முதல் மந்திரிகளையும் குறி வைக்க ஏதுவாகிவிடும் என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

Update: 2024-05-24 10:10 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜாமீன் பெற்று வெளிவந்த அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது இடைக்கால ஜாமீன் வரும் 1-ந்தேதி முடிவடைய உள்ள நிலையில், அவர் சிறையில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனிக்க, கோர்ட்டில் அனுமதி கேட்டு முறையிட உள்ளார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே, பா.ஜனதா கட்சியினர், அவர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

"நான் வருமான வரித்துறை ஆணையர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லி குடிசை பகுதியில் பணி செய்திருக்கிறேன். டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றபோது யாரும் ஏனென்று கேட்கவில்லை. யாரும் சாதாரண பியூன் வேலையைக்கூட உதற தயாராக இல்லாதபோது நான் முதல் மந்திரி நாற்காலியை உதறினேன். ஆனால் இந்த வேளையில் எதையும் ஆராயாமல் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இது எனது போராட்டத்தின் ஒரு பகுதி.

ஆம் ஆத்மி கட்சி 2015-ல் சட்டசபை தேர்தலில் 67 தொகுதிகளையும், 2020-ல் 62 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் தேர்தலில் எங்களை தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி சதித்திட்டத்தின் மூலம் என்னை கைது செய்துள்ளார். எனது அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்பதற்காகவே இதைச் செய்தனர். ஆனால் நான் அவர்களின் சதித்திட்டத்தை வெற்றியடைய விடமாட்டேன். இந்த வழக்கு முழுவதும் போலியாக சித்தரிக்கப்பட்டது. நான் பணத்தை பெற்றுக்கொண்டு எதையும் தவறாக செய்யவில்லை. நான் மோசடி செய்து பலவீனமாக இருந்திருந்தால், பா.ஜனதாவுக்கு சென்று எனது தவறுகளை மறைத்து பாவத்தை கழுவிக் கொள்ள முடியும்.

நான் ராஜினாமா செய்தால் அது ஒரு முன் உதாரணமாக மாறிவிடுவதோடு, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தாவையும் கைது செய்ய வழி செய்துவிடும். அவரையும் ராஜினாமா செய்ய கேட்பார்கள். அதேபோல தமிழக முதல்வரையும் கைது செய்து ராஜினாமா செய்ய வலியுறுத்துவார்கள். எனவே எங்கெங்கு பா.ஜனதா தேர்தலில் தோற்றாலும், அங்குள்ள எதிர்க்கட்சி முதல்மந்திரிகளை கைது செய்யலாம். அது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது.

கடந்த சில வாரங்களாக அவர்கள், இது ரூ.100 கோடி முறைகேடு என்று கூறி வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் ரூ.1100 கோடி முறைகேடு என்று கூறினார்கள். இப்போது அந்த பணம் எங்கு போனது. ஒரு ரூபாயாவது இதுவரை கைப்பற்றினார்களா. ஒரு ஆதாரமாவது கிடைத்ததா? அவர்கள் வழக்கை போலியாக சித்தரித்து நாடகமாடுகிறார்கள். எங்களை கைது செய்வதற்காகவே நடத்தப்பட்ட நாடகம் இது. என்னை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டு உள்ளார்கள். ஆனால், என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கோர்ட்டு கூறிஉள்ளது"இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்