பேரையூர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர்-2 மாணவர்கள் பலி - ஒருவர் படுகாயம்

பேரையூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் போலீஸ்காரர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-01-10 23:00 GMT
பேரையூர்,

விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் பாண்டியன் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று கார்த்திக் பாண்டியும், உறவினர் ஜெயபாண்டியனும் (28) மோட்டார் சைக்கிளில் நத்தம்பட்டியில் இருந்து மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

ராஜபாளையம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பாறைப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது தேனி மாவட்டம் போடியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஜெயந்த், கேசவன் ஆகிய கல்லூரி மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்தில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் இரண்டு வாகனங்களில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் கார்த்திக் பாண்டியன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜெயந்த் (21), கேசவன் (19) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெயபாண்டியன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர், டி.கல்லுப்பட்டி போலீசார், பலியான மூன்று பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான மாணவர் ஜெயந்த், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவரது சொந்த ஊர் போடி ஆகும்.

மற்றொரு மாணவர் கேசவன், போடியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்