ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது.

Update: 2020-03-01 00:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு நடப்பாண்டு செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வடிகால் கட்டணம், சேவை கட்டணம், குடியிருப்பு வாடகை, தொழில் உரிம கட்டணம் மற்றும் இதர வரிகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செலுத்த வேண்டும் என்று நகராட்சி கமி‌‌ஷனர் சரஸ்வதி அறிவித்தார். மேலும் வரி செலுத்தாத குடியிருப்புதாரர்கள், அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் ஊட்டி நகராட்சி அலுவலக வசூல் மையத்தில் வரிகளை செலுத்த மார்க்கெட் கடை வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இதையடுத்து விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூலிக்க அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஊட்டி நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் சோதனை நடத்தியதில் சுகாதார ஆய்வாளர்கள் 4 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகாதார அதிகாரி டாக்டர் முரளிசங்கரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், மகாராஜா, ஞானசேகரன் ஆகிய 4 பேரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது.

ஆவணங்கள் சிக்கின

ஊட்டியில் உள்ள கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆண்டுதோறும் பாதுகாப்பு சம்பந்தமான சான்றிதழை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். சான்றிதழ்களை புதுப்பிக்க பலர் வந்து உள்ளனர். இதற்கிடையே கணக்கில் வராத பணம் சிக்கியது. அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடந்தது. இதில் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்