வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தவங்கி இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை: கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ.விடம் டாக்டர்கள் புகார்
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த வங்கிஇல்லாததால் அறுவை சிகிச்சை செய்யமுடியவில்லை என்று கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ.விடம் டாக்டர்கள் புகார் கூறினார்கள்.;
ரத்த வங்கி
வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு நோயளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், ஆஸ்பத்திரியின் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த மகப்பேறு மற்றும் பொது பிரிவு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் எம்.எல்.ஏ.விடம் கூறியதாவது:-
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து நோயாளிகளுக்கும், மகப்பேறு நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு டாக்டர்கள் நாங்கள் பணியிலிருக்கின்றோம். ஆனால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான பரிசோதனைகள் செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை.குறிப்பாக எக்ஸ்ரே எடுப்பதற்கான நவீன கருவிகள், ஈ.சி.ஜி. எடுப்பதற்கான கருவிகள், கர்ப்பிணிப் பெண்களை பரிசோதிப்பதற்கான ஸ்கேன் கருவிகள் உள்ளன.
ஆனால் இந்த கருவிகளை கையாளுவதற்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அறைகள்(ஆபரேஷன்தியேட்டர்) உள்ளது.ஆனால் 100 ஆண்டுகளை கடந்து விட்ட அரசு ஆஸ்பத்திரியில் இது நாள் வரை ரத்தவங்கியோ, ரத்த குளிர்சாதன வசதியோ இல்லாமல் இருந்து வருகிறது.
அடிப்படை வசதிகள்
இதனால் கர்ப்பிணிப் பெண்கள் அவசர பேறுகால சமயத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையையும் தாயையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண்களை கடைசி நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பொள்ளாச்சி கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பவேண்டிய நிலையில் நாங்கள் இருந்து வருகிறோம்.
எனவே வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக ரத்த வங்கி அமைத்து தரவேண்டும்.மேலும் போர்க்கால அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.இதே போல ஆஸ்பத்திரிக்கு தேவையான துப்புரவு பணியாளர்கள்,அலுவலக பணியாளர்கள், ஆம்புலன்ஸ் வசதியும் வேண்டும்.மேலும் ஆஸ்பத்திரிக்கு தேவையான குளிர்சாதன பெட்டிகள், சக்கரநாற்காலிகள், உள்நோயாளிகள் பயன்படுத்துவதற்கான படுக்கை வசதிகள்,நோயாளிகள் சுடு தண்ணீரை பயன்படுத்துவதற்கு ஹீட்டர்கள்,நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய துணிகளை துவைப்பதற்கு தேவையான துணி துவைக்கும் எந்திரங்கள் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நடவடிக்கை
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ., தொழில்நுட்ப பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களையும் நியமிப்பதற்கும், ரத்தவங்கி அமைப்பதற்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் வழியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர், தனது சார்பிலும் கூட்டுறவுநகர வங்கித்தலைவர் வால்பாறை அமீது, துணைத்தலைவர் மயில்கணேசன் சார்பில் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு 3 குளிர்சாதன பெட்டிகள் வழங்குவதற்கும், அ.தி.மு.க.வின் கட்சி தொண்டர்கள் மூலமும் துணிதுவைக்கும் எந்திரமும்,சக்கர நாற்காலிகள், படுக்கைகள்,சுடுதண்ணீர் வழங்குவதற்கான ஹீட்டர்களும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
முன்னதாக எம்.எல்.ஏ.அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.அப்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கல்லூரிக்கு குடிதண்ணீர் வசதிக்காக ரூ 10 லட்சம் ஓதுக்கீடு செய்து அறிவித்தார்.
நிகழ்ச்சிகளில் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி துணைத்தலைவர் மயில்கணேசன், அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்டபாசறைஇணை செயலாளர் சலாவுதீன், துணைநகரகழக செயலாளர் பொன்கணேசன், அவைத்தலைவர் ஜார்ஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் நரசப்பன்,கழக பொருளாளர் பெருமாள்,மோகன்,சௌந்தர்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.