தஞ்சை அருகே குடிநீர் குழாயில் உடைப்பை சரி செய்யும் பணி தொடக்கம்

தஞ்சை அருகே குடிநீர் குழாயில் உடைப்பை சரி செய்யும் பணி தொடங்கியது.

Update: 2020-03-03 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் செல்லக்கூடிய பிரதான குழாயில் தஞ்சை அருகே கண்டியூர் பஸ் நிறுத்தம் அருகே 2 இடங்களிலும், கண்டியூர் அரசு பள்ளி எதிர்புறம் 1 இடத்திலும், பெருமாள் கோவில் சந்தில் 2 இடங்களிலும், நடுக்கடையில் 1 இடத்திலும், பழைய திருவையாறு ரோட்டில் 4 இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டிருந்தது.

சரி செய்யும் பணி

இதனால் தஞ்சைக்கு வரக்கூடிய குடிநீர் அளவு குறைந்தது. குடிநீர் வீணாவதை தடுக்க உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டி, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியை நேற்று தொடங்கினர்.

இந்த பணி நாளை(வியாழக்கிழமை) வரை நடக்கிறது. இப்பணியால் நேற்று தஞ்சை மாநகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது எனவும், பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொண்டு சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்