வேலூரில் 2 மணி நேரத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது வழக்கு - சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் நடவடிக்கை

வேலூரில் 2 மணி நேரம் நடந்த சிறப்பு வாகன தணிக்கையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

Update: 2020-03-05 22:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முக்கிய பகுதிகளில் தினமும் போலீசார் வாகன தணிக்கை நடத்துகிறார்கள். அப்போது மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி அறிவுறுத்தலின்பேரில் வேலூர் நகரில் நேற்று சிறப்பு வாகன தணிக்கை நடத்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி, வேலூர் நேஷனல் சர்க்கிளில் 3 இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், காரில் சீட்பெல்ட் அணியாதவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சிலர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் வைத்து கொண்டு அணியாமல் வந்தனர். அவர்களுக்கு போலீசார் அதனை அணிந்துவிட்டு, கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். வாகன தணிக்கையை அறிந்த சில இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்துவதை தவிர்க்க தாங்கள் வந்த வழியிலேயே திரும்பி சென்றதை காண முடிந்தது. பிடிப்பட்ட சிலர் வி.ஐ.பி.க்களுக்கு போன் செய்து சிபாரிசை நாடினர். ஆனால் போலீசார் எந்த சிபாரிசையும் ஏற்காமல் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்கள் மீது நவீன கையடக்க எந்திரம் மூலம் வழக்குப்பதிந்து ரூ.100 அபராதம் விதித்தனர். சிறப்பு வாகன தணிக்கையை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஹெல்மெட், சீல்பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் அறிவுரை வழங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில், அலுவலகம், அவசர வேலைக்காக செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து கஷ்டப்படுத்துவது போலீசாரின் நோக்கம் கிடையாது. உங்கள் நலன் மற்றும் குடும்பத்தின் நலனுக்காக தான் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் சீட்பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். குடும்பம், குழந்தைகளுக்காக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். தரமான ஹெல்மெட் வாங்கி அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் நடந்த வாகன தணிக்கையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.69 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்