விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூரில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், நேற்று தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை யொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
அரியலூர்,
அரியலூர் அண்ணாசிலை அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரியலூர் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சி, பெருமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் வியாபார நிலையங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதி வைக்க வேண்டும். அலுவலகங்களில் அனைத்து பதிவேடுகளும் தமிழ் மொழியில் தான் எழுதப்பட வேண்டும். அனைவரும் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் அண்ணா சிலை அருகே வந்து முடிவடைந்தது.
ஊர்வலத்தில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா, நகராட்சி ஆணையர் குமரன், தாசில்தார் கதிரவன், பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் மாயகிருஷ்ணன் மற்றும் தமிழ் அமைப்புகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.