பெரம்பலூர், அரியலூரில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

பெரம்பலூர், அரியலூரில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-03-08 23:00 GMT
பெரம்பலூர்,

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. நேற்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பலர் உயர்ந்த பதவிகளில் வகித்து வருகின்றனர். அதன்படி முதன்மை அமர்வு நீதிபதி பதவியில் மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி பொறுப்பு வகிக்கிறார். மாவட்ட கலெக்டராக சாந்தாவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நிஷா பார்த்திபனும் பணிபுரிந்து சாதனை படைத்து வருகின்றனர். இதனால் நீதித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் ஆகியவற்றில் பெண்கள் தான் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறார்கள் என்ற பெருமையை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஒரு சில தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் கடந்த 6-ந் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

போலீஸ் நிலையங்களில் கொண்டாட்டம்

இதேபோல் பெரம்பலூர், குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாரால் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் அனைவரும் ஒரே நிறத்தினால் ஆன புடவைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ரோஜாப்பூ கொடுத்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். பதிலுக்கு பெண் போலீசாரும், இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பின்னர் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி முன்னிலையில் பெண் போலீசார் கேக் வெட்டி பகிர்ந்தனர்.

நிகழ்ச்சியில் பெண் போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. முன்னதாக பெண் போலீசார் தங்களது செல்போன்களில் குரூப் புகைப்படம், “செல்பி“ எடுத்து மகிழ்ந்தனர். விழா முடிந்தவுடன் வழக்கம்போல் போலீசார் தங்களது பணிகளுக்கு திரும்பினர். இதேபோல் குன்னம் போலீஸ் நிலையத்திலும் மகளிர் தின விழா பெண் போலீசாரால் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் தங்களது தோழிகளுக்கும், ஆண்கள் தங்களது பெண் தோழிகளுக்கும் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் உலக மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துகள், கவிதைகளை பரிமாறி கொண்டனர். பலர் தங்களது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதை, திரைப்பட பாடல்களை வைத்திருந்தனர். மேலும் டிக்-டாக்கிலும் பலர் மகளிர் தின வாழ்த்துகள் பகிர்ந்ததை காணமுடிந்தது.

எதையும் சாதிக்கலாம்

விளாங்குடி அருகே உள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், முன்னேற்றத்திற்கு தேவைபடும் உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்களுக்கு அறிவு வளர்வதற்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். செல்போனை மாணவர்கள் அதிக நேரம் பயன்படுத்துகிறீர்கள், அதை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்றார். தொடர்ந்து மகளிர் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தது. இதில் கல்லூரி அலுவலர் நாகராஜன், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி பேராசிரியை ஜெயந்தி வரவேற்றார்.

மேலும் செய்திகள்