தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம்

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2020-03-08 22:30 GMT
கரூர்,

கரூர் தாந்தோணிமலையில் தென் திருப்பதி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி)29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் சிம்மவாகனம், வெள்ளி, அனுமந்த வாகனம், யானை வாகனம், புஷ்ப வாகனம் உள்ளிட்டவற்றில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 6-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மாசிமக தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்தபடி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள், சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதையடுத்து தேர் நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பொதுமக்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 17-ந்தேதி புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்