தமிழக எல்லையில் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு: பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

தமிழக-கேரள எல்லையான புளியரையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழிகள் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2020-03-10 00:00 GMT
செங்கோட்டை,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி போகாத நிலையில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு பகுதியில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. இதனால் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழக-கேரள எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

திருப்பி அனுப்பப்பட்டன

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச்சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைச்சாவடியில் நிறுத்தி கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்கள். கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே அனைத்து வாகனங்களும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. கோழிக்கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. கேரளாவில் இருந்து வாகனங்களில் உயிருடன் ஏற்றி வரப்பட்ட கோழிகள், வாத்துகள் கண்டறியப்பட்டு மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

கூடலூர்

இதே போல் கூடலூர்- கேரள எல்லைகளான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல், கக்குன்டி மற்றும் கக்கநல்லா சோதனைச்சாவடிகளில் கால்நடை மருத்துவ குழுவினர் முகாமிட்டு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்