பேரணாம்பட்டில், வார்டு மறுவரையறையை கண்டித்து சாலை மறியல் - நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்

பேரணாம்பட்டு நகராட்சியில் வார்டு மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சியை முற்றுகையிட்டு, சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.;

Update:2020-03-10 04:00 IST
பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் வார்டு மறுவரையறை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. பின்னர் நகராட்சி வார்டு மறு வரையறை பட்டியல் நகராட்சி அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் சில வார்டுகளில் உள்ள வீடுகள் பிரிக்கப்பட்டு வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஒரு வார்டில் வீடுகளின் எண்ணிக்கை குறைவாகவும், சில வார்டுகளில் அதிகப்படியாகவும் இருந்தது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் இதனை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் மீண்டும் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது போலீஸ் நிலையம், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலகங்கள். 6 கோவில்கள், 2 மசூதிகள் அமைந்துள்ள 9-வது வார்டை மறு வரையறை செய்து திருவிழாக்கள் நடைபெற்று வரும் கோவில்கள் அமைந்த ஆச்சாரி வீதி, பஜார் வீதி பகுதியை அருகிலுள்ள முஸ்லிம் வார்டுகளான 6, 7-வது வார்டுகளில் இணைத்தும், சவுக் ரோட்டை 16- வது வார்டிலும், மேஸ்திரி வீதி, சுப்பையா வீதி, கர்ணம் வீதி, வீராசாமி வீதி, ஜெயா வீதி, கெங்கை அம்மன் கோவில் வீதி ஆகிய 6 வீதிகளை 12-வது வார்டில் இணைத்து ஒட்டு மொத்தமாக 9-வது வார்டானது கலைக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது.

இதனால் ஆத்திரமடைந்த 9-வது வார்டு பொதுமக்கள் வார்டை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில் விழாக்கள் நடைபெறும் பகுதியை முஸ்லிம் வர்டுகளில் இணைக்கக்கூடாது என்றும், கோவில் விழாக்கள் நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஏற்கனவே உள்ளவாறு ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக சிவக்குமார் தலைமையில் முன்னாள் கவுன்சிலர்கள் சாம்ராஜ், மோகன் உள்பட 100-க்கணக்கானவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் நகராட்சி அலுவலகம் எதிரில் குடியாத்தம் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்று நகராட்சி ஆணையாளர் நித்தியானந்தனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு ஆணையாளர் மறுவரையறை அலுவலரான குடியாத்தம் நகராட்சி ஆணையாளருக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். இதன் பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்