தெரு விளக்குகளில் இரட்டை இலை சின்னம் போன்ற வடிவத்தை அகற்றக்கோரி தி.மு.க.வினர் மனு

புதுக்கோட்டையில் தெரு விளக்குகளில் இரட்டை இலை சின்னம் போன்ற வடிவத்தை அகற்றக்கோரி தி.மு.க. வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2020-03-10 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சாலையின் நடுவே நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த தெரு விளக்குகளில் இரட்டை இலை சின்னம் போல் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் அ.தி.மு.க. கட்சியின் சின்னமான இரட்டை இலை போன்று உள்ளது எனக்கூறி புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் ஒரு மனு அளித்தனர். அதில், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சாலையின் நடுவே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள தெருவிளக்குகள் அ.தி.மு.க. கட்சியின் சின்னமான இரட்டை இலை போன்று உள்ளது. வரக்கூடிய நகர்மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. இதுபோன்று செயல்படுகிறது. எனவே உடனடியாக தெரு விளக்கில் உள்ள இரட்டை இலை சின்னம் போல் உள்ள வடிவத்தை அகற்ற வேண்டும் எனக்கூறி இருந்தனர்.

மாற்றாவிட்டால் போராட்டம்

தொடர்ந்து வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அ.தி.மு.க. சார்பில் 100 அடி உயரம் உள்ள கட்சிக்கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடி அகற்ற நடவடிக்கை மேற்கொள்வோம். மேலும் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளில் இரட்டை இலை சின்னம் போல் உள்ள வடிவத்தை மாற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

மேலும் செய்திகள்