போலீஸ் வாகன சோதனையில் அபராத தொகையை விட மதிப்பு குறைவால் நடுரோட்டில் விடப்பட்ட மொபட்

அபராத தொகையை விட மதிப்பு குறைவு என்பதால் நடுரோட்டில் மொபட்டை விட்டுச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

Update: 2020-03-10 23:25 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் விதமாகவும் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஆங்காங்கே சாலையிலுள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்துள்ளனர். விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போக்குவரத்து அதிகம் உள்ள இடங்கள், சந்திப்புகளில் போலீசார் அதிரடியாக வாகனசோதனை நடத்தி அபராதம் விதித்து வருகிறார்கள். வாகனங்களின் ஆவணங்கள், இன்சூரன்ஸ், வாகனத்தை ஓட்டுபவர்களிடம் லைசென்ஸ் உள்ளதா? மது அருந்தியுள்ளாரா? என்பது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அபராத தொகையை விட மதிப்பு குறைவு

இந்த வகையில் நேற்று வெங்கட சுப்பாரெட்டியார் சிலை அருகே போலீசார் வழக்கம்போல் வாகன சோதனை நடத்தினார்கள். வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோர்ட்டில் சென்று அபராத தொகை கட்டுவதற்கான ரசீது கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த வழியாக ஒரு மொபட்டில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஓட்டி வந்த மொபட்டுக்கு உரிய ஆவணங்களோ, ஓட்டுனர் உரிமமோ இல்லை. உடனே வாகனத்தை போலீசார் அருகே நடு ரோட்டில் நிறுத்திவிட்டு ஆவணங்களை எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றவர்கள் அதன்பிறகு திரும்பவில்லை.

அதாவது லைசென்சு இல்லாததற்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம், இன்சூரன்ஸ் இல்லையென்றால் 2 ஆயிரம் வரை அபராதம் என போலீசார் சொன்னதை கேட்டு அபராத தொகையை விட மதிப்பு குறைவு என்பதால் மொபட்டை விட்டுச் சென்று இருப்பது தெரியவந்தது. அந்த மொபட்டை பறிமுதல் செய்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்