மாநிலங்களவை எம்.பி. தேர்தல் : பா.ஜனதா சார்பில் ராம்தாஸ் அத்வாலே, உதயன்ராஜே போஸ்லே வேட்புமனு

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, உதயன்ராஜே போஸ்லே ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2020-03-12 23:51 GMT
மும்பை, 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் சரத்பவார், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, காங்கிரசை சேர்ந்த ஹூசேன் தால்வி, சிவசேனாவின் ராஜ்குமார் தூத், பா.ஜனதாவின் அமர் சாப்லே, பா.ஜனதா ஆதரவு சுயேச்சை சஞ்சய் காகடே, தேசியவாத காங்கிரசின் மஜீத் மேமன் ஆகிய 7 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இதையொட்டி புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்தநிலையில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, முன்னாள் எம்.பி. உதயன்ராஜே போஸ்லே, அவுரங்காபாத் முன்னாள் மேயர் பகவத் காரட் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இன்றுடன் முடிகிறது

சத்தாரா தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த உதயன்ராஜே போஸ்லே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் இணைந்தார். எனினும் இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு அதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

இந்தநிலையில் உதயன்ராஜே போஸ்லே நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 7 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது.

மேலும் செய்திகள்