காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

Update: 2020-05-31 23:37 GMT
பென்னாகரம்,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தடை உள்ளது. இதனால் பஸ் நிலையம், பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த 20-ந்தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் நீர்வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கியது.

அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருமழை தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வறண்டு கிடந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின் அருவி, பரிசல் துறை, மசாஜ் செய்யும் இடம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு செல்வதை தடுக்க சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்