மத்திய அரசை கண்டித்து மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

Update: 2020-06-02 22:32 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் மின்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை இதற்காக  உருவாக்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் நேற்று காலை வம்பாகீரப்பாளையம் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் நகரப் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து இருந்தனர். போராட்டத்திற்கு தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மதிவாணன், துணை பொதுச்செயலாளர் தணிகாசலம், துணைத்தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 5-ந்தேதி வரை ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒருநாள் வீதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக மின் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்