ஏலத்துக்கு மீன்கள் குவிந்தன: தூத்துக்குடியில் மீண்டும் சுறுசுறுப்படைந்த மீன்பிடி துறைமுகம்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி உள்ளது.

Update: 2020-06-04 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டன. அதன்படி மீன்பிடி தொழிலும் நடைபெறாமல் இருந்தது. அன்று முதல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முழுமையாக செயல்படாமல் இருந்தது.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் மீன்பிடி தொழிலுக்கு நிபந்தனையுடன் விலக்கு அளிக்கப்பட்ட நேரத்தில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் தினமும் சுறுசுறுப்பாக பல கோடி ரூபாய் மதிப்பில் மீன்கள் விற்பனை நடந்து வந்த தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் தொடர்ந்து இயங்காத நிலையில் இருந்தது.

அந்த காலகட்டத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் சீரமைத்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை முன்கூட்டியே தளர்த்தியது. இதனால் கடந்த 1-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 240 விசைப்படகுகளில், ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் 120 படகுகள் கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தினமும் 120 விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் விசைப்படகு மீனவர்கள் வலையில் ஏராளமான பாறை மீன்கள் பிடிபட்டன. அதே போன்று சீலா, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதிகமாக பிடிபட்டு உள்ளன. இந்த மீன்களை மீனவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். மீன்பிடி துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 120 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றதால், மீன்கள் போதுமான அளவுக்கு கிடைத்து வருகின்றன.

பாறை, சீலா உள்ளிட்ட மீன்கள் நன்கு வளர்ச்சி பெற்று பெரிய மீன்களாக பிடிபட்டு வருகின்றன. அதே போன்று சாளை, நெத்திலி, காரல் மீன்களும் அதிகமாக பிடிபட்டு வருகின்றன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது. முன்பு ஒரு நாளைக்கு ஒரு படகில் ரூ.2 லட்சம் வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது ரூ.3 லட்சம் வரை மீன்கள் கிடைக்கின்றன“ என்றார்.

மேலும் செய்திகள்