சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட 600 பேருக்கு தொற்று இல்லாமல் குழந்தை பிறந்தது

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 191 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு தொற்று இல்லாமல் குழந்தை பிறந்தது.

Update: 2020-06-11 22:15 GMT
சென்னை,

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா எளிதில் தாக்குகிறது. எனவே தமிழகம் முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களும், பிரசவம் நடைபெறும் நிலையில் உள்ள நிறைமாத கர்ப்பிணிகளும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகள், அரசு மகப்பேறு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு ஆளாகும் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்றையை நிலவரப்படி அரசு மருத்துவமனைகளில் 191 கர்ப்பிணிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 191 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 70 பேரும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு

மருத்துவமனையில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும் என மொத்தம் 191 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்று, அவர்களது குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்