கோவை டி.கே.மார்க்கெட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 88 காய்கறி கடைகள் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை டி.கே.மார்க்கெட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 88 காய்கறி கடைகள் இடித்து அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-06-11 22:07 GMT
கோவை,

கோவை டி.கே.மார்க்கெட்டில் 450-க்கும் மேலான காய்கறி கடைகள் உள்ளன. இது தவிர பெரியகடைவீதிக்கும்-ராஜவீதிக்கும் இடையே டி.கே.மார்க்கெட் பகுதியில் 88 காய்கறி கடைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இதனை அகற்றக்கோரியும் சிலர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு காய்கறி கடைகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏற்கனவே டி.கே.மார்க்கெட்டில் 50 சதவீத கடைகளை மட்டும் திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், தெற்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்றனர். அத்துடன் பாதுகாப்புக்காக அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

88 கடைகள் அகற்றம்

மேலும்கடைகளை இடிக்க பொக்லைன் எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 88 காய்கறி கடைகளையும் இடித்து அகற்றினார்கள். இதுதவிர போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த புறக்காவல் நிலையமும் இடித்து அகற்றப் பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறும்போது, கொரோனா காலத்தில் தற்காலிக கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் நாங்கள் காலம் காலமாக நடத்திவந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதால் 88 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. எனவே எங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு, கடைகளை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும் என்றனர்.

மாற்று இடம் வழங்க உறுதி

இதைத்தொடர்ந்து நடைபாதை காய்கறி வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் எந்தப்பகுதி என்று முடிவு செய்யப்படவில்லை என்றும், எங்கு கடைகள் அமைக்க இடம் ஒதுக்குவது என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்