கொரோனா தடுப்பு நடவடிக்கை சென்னையில் 8 லட்சம் முதியவர்கள் தொடர் கண்காணிப்பு - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் 8 லட்சம் முதியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2020-06-14 01:51 GMT
சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 600 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு மறுபயன்பாடுடன் கூடிய முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சென்னையில் மட்டும் 8 லட்சம் முதியவர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் களப்பணியில் அனைத்து துறைகளையும் சேர்ந்த 38 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா போரில் வெற்றிக் கொள்ள முடியும்.

உயிரிழப்பை பொறுத்தவரையில் உலகளவிலும் சரி, இந்தியளவிலும் சரி நாம் மிக, மிக குறைவு. இதுவரையில் சென்னையில் 14 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 13 ஆயிரம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உண்மை இவ்வாறு இருக்க, கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பி மக்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார்.

இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. உலகளவில் அனைத்து நாடுகளும் எவ்வாறு புள்ளிவிவரங்கள் வெளியிடுகிறதோ, அதேபோல் தான் வெளியிடப்படுகிறது. இதில் எதுவும் மறைக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக தான் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ராயபுரம் மண்டலத்தில் 1,400 தெருக்கள் உள்ளது. அதில் ஒன்றுக்கும் குறைவான தொற்று 50 தெருக்களில் மட்டுமே உள்ளது. 5-க்கும் அதிகமான தொற்று பாதிப்பு 400 தெருக்களில் உள்ளது. இந்த தெருக்களில் தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைய ஆரம்பிக்கிறது. உயிரை பணயம் வைத்து பணி செய்யும் டாக்டர்களுக்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்