ஊராட்சி அலுவலகத்தை சூறையாடிய மணல் வியாபாரியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் தர்ணா

ஊராட்சி அலுவலகத்தை சூறையாடிய மணல் வியாபாரியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-15 00:27 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜான். மணல் வியாபாரி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தாமஸ் மகன் ரீகன் என்பவருக்கும் விளம்பர பேனர் கிழிப்பு பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ரீகன், சங்கேந்தி ஊராட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து அங்கிருந்த ஊராட்சி தலைவர் ராஜாவிடம் தகராறு குறித்து முறையிட்டார். அப்போது அங்கு வந்த ஜான், ரீகனை தாக்கி அலுவலகத்தை சூறையாடினார். இதனால் அங்கிருந்த பொருட்கள், ஆவணங்கள் சிதறி கிடந்தன.

கிராம மக்கள் தர்ணா

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜா எடையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் மணல் வியாபாரி ஜானுக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி தலைவர் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் எடையூர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தி.மு.க. ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சண்முகம், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது ஊராட்சி அலுவலகத்தை சூறையாடிய மணல் வியாபாரியை கைது செய்ய வேண்டும். புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வழக்குப்பதிவு

கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜமோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மணல் வியாபாரி ஜான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

மேலும் செய்திகள்