நீடாமங்கலம் ரெயில்வே கேட் 2 மணிநேரம் மூடல் பொதுமக்கள் அவதி

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 2 மணி நேரம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2020-06-17 00:49 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் உள்ளது. தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே இந்த ரெயில்வே கேட் அமைந்து இருப்பதால் நெடுஞ்சாலை போக்குவரத்து கடும் பாதிப்புக்கு ஆளாகிறது.

நீடாமங்கலத்தில் சாலை போக்குவரத்து பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையிலும் முறையான தீர்வு காணப்படாததால் பொதுமக்கள் தினசரி சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பயணிகள் ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டி இணைப்பு பணி நேற்று அதிகாலை தொடங்கியது.

போக்குவரத்து ஸ்தம்பித்தது

இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. 3-வது நடைமேடை பகுதியில் இருந்து 2-வது நடைமேடை பகுதிக்கு சரக்கு ரெயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து காலை 6.15 மணி அளவில் சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

இதனிடையே 3-வது நடைமேடையில் சரக்கு ரெயில் காலி பெட்டிகள் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில்வே கேட் 2 மணி நேரம் மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரெயில்வே கேட்டின் இருபுறமும் ஏராளமான லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரெயில்வே கேட் திறந்தவுடன் 2 மணிநேர தாமதமாக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

தீர்வு

இருவழிச்சாலை திட்டம், மேம்பாலம் திட்டம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படாததால் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.

பழையநீடாமங்கலம் -வையகளத்தூர் மேம்பாலம் அருகில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறைவேறும் பட்சத்தில் இந்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்