கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Update: 2020-06-18 06:09 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு இந்த மாத தொடக்கத்தில் பெய்த மழையால் கடந்த 3-ந் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 30.55 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 605 கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது மதகு பொருத்தும் பணிகள் நடந்து வருவதால், 30 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் கே.ஆர்.பி. அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 720 கனஅடி நீர் திறக்கப்பட்டதால், நேற்று கே.ஆர்.பி. அணைக்கு 422 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்காலில் இருந்து வினாடிக்கு 118 கனஅடியும், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 390 கனஅடியும் என மொத்தம் 508 கனஅடி தண்ணீர் பாரூர் ஏரிக்கு மதகு வழியாக திறந்து விடப்பட்டது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று காலை நிலவரப்படி 29.50 அடியாக நீர்மட்டம் இருந்தது.

இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்