அபூர்வ வானியல் நிகழ்வு: மதுரையில் ஓரளவு தெரிந்த கங்கண சூரிய கிரகணம்

வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் மதுரையில் ஓரளவு தெரிந்தது.

Update: 2020-06-22 05:58 GMT
மதுரை, 

சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு வளையம் போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரிவதையே கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அந்தவகையில் வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நேற்று ஏற்பட்டது.

ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்த கங்கண சூரிய கிரகணம் நேற்று தென்பட்டது. இதேபோல நேபாளம், தெற்கு சீனா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மேற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிலும் கங்கண சூரிய கிரகணம் தெளிவாக காணமுடிந்தது. இந்தியாவில் காலை 9.56 மணிக்கு பகுதி அளவு கிரகணம் தென்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு கங்கண கிரகணம் முழு அளவை எட்டியது. அப்போது சூரியனின் நடுப்பகுதி மறைந்து, அதன் விளிம்பு பகுதி ஒளி பிழம்பான ஒரு வளையமாக காட்சியளித்தது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, ராமேசுவரம், திருச்சி, கோவை, சேலம், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கங்கண சூரிய கிரகணம் தெரிந்தது. மதுரையில் காலை 10.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் சூரியனை, நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மறைத்தது. சென்னையில் இந்த கங்கண சூரிய கிரகணம் 34 சதவீதம் மட்டுமே பார்க்க முடியும் என்று வல்லுனர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

பிற்பகல் 1.41 மணிக்கு கிரகணம் நிறைவடைந்தது. இந்த கங்கண கிரகணத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று மதுரை வாசிகள் நேற்று ஆர்வமாக இருந்தனர். வெறும் கண்ணால் கிரகணத்தை காண கூடாது என்பதால் வீட்டில் உள்ள பழைய எக்ஸ்ரே படங்களை கொண்டு வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கங்கண சூரிய கிரகணத்தை பார்த்தனர். மேகமூட்டம் வேறு இருந்ததால் நேற்று இந்த கங்கண சூரிய கிரகணத்தை முழுமையாக மக்களால் பார்த்து ரசிக்க முடியாமல் போனது.

மதுரையில் நேற்று தெரிந்த சூரிய கிரகணம் முழுவதுமாக தெரியாமல் வெறும் 26 சதவீதம் அளவில் மட்டுமே தென்பட்டது. குறிப்பாக மதுரை நகரில் மாரியம்மன் தெப்பக்குளம், கே.கே.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிரத்யேக கண்ணாடிகள் கொண்டும் வீடுகளில் உள்ள எக்ஸ்ரே, ஸ்கேன் பிலிம்களை பயன்படுத்தியும் சூரியகிரகணத்தை பார்த்தனர்.

சூரியகிரகணத்தையொட்டி மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது. சூரியகிரகணம் முடிந்த பின்பு கோவில்களில் பிரத்யேக பூஜைகள் செய்யப்பட்டு கோவில்களில் நடைகள் திறக்கப்பட்டன.

நேற்று நடந்த கங்கண சூரிய கிரகணம் இந்த ஆண்டில் முதல் கிரகணம் ஆகும். அடுத்து டிசம்பர் 14-ந்தேதி கிரகணம் தெரியும் என்று வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்