வெளி மாநிலங்களில் இருந்து தர்மபுரி வந்தவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு

வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தர்மபுரிக்கு வந்தவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்யும் பணி நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2020-07-03 00:46 GMT
தர்மபுரி, 

வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தர்மபுரிக்கு வந்தவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்யும் பணி நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கணக்கெடுப்பு பணி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று ஏராளமானோர் வருகிறார்கள். இ-பாஸ் இல்லாமல் வருபவர்களையும் கண்டறிய சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இவ்வாறு தர்மபுரி நகராட்சி பகுதிக்கு வந்தவர்களில் கொரோனா பரிசோதனை செய்யாமல் யாராவது இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதேபோல் கர்ப்பிணிகள், குழந்தைகள் குறித்த விவரங்களும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.

சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் யாருக்காவது உள்ளதா? அத்தகையவர்கள் உரிய சிகிச்சை பெற்று வருகிறார்களா? என்பது குறித்த விவரங்களும் கேட்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பின்போது வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்