சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-03 06:15 GMT
ஆலங்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோதிவேலின் மகன் புவனேஸ்வரன்(வயது 24). கொத்தனாரான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் கட்டிட வேலை பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததில் புவனேஸ்வரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த ஆலங்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, அந்த சிறுமி தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

கைது

இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு வந்த புவனேஸ்வரன், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை அழைத்து சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி, கோவை செல்ல தயாராக இருந்த அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆலங்குடி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார். மேலும் சிறுமியை கடத்தியதாக புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்