18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-07-04 00:13 GMT
திண்டுக்கல், 

பொதுசுகாதாரம், மருத்துவம் உள்பட அனைத்து துறைகளிலும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதேபோல் தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் பிச்சைவேல், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, வட்ட செயலாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் திண்டுக்கல்-பழனி சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே திண்டுக்கல் நகர தொழிற்சங்கங்களின் இணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கம், காப்பீட்டு மற்றும் தொலைதொடர்புத்துறை ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா காலத்தை பயன்படுத்தி ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்