சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதுடன் திருப்பூர் மக்களின் நண்பனாக காவல்துறை இருக்கும் புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பேட்டி

திருப்பூர் மாநகரில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பதுடன் பொதுமக்களின் நண்பனாக காவல்துறை இருக்கும் என்றுபுதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

Update: 2020-07-04 03:39 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சஞ்சய்குமார் சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கார்த்திகேயன் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு 7-வது போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பொதுமக்களின் நண்பன்

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி. அவினாசியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளேன். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது திருப்பூர் சரகம் அதன் கீழ் இருந்தது. கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றியுள்ளேன். இதனால் திருப்பூர் எனக்கு பரீட்சயமான இடம். கொரோனா பரவி வரும் நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத நல்லிணக்கம் பேணும் வகையில் காவல்துறை செயல்படும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். திருப்பூர் மாநகர பொதுமக்களின் நண்பனாக காவல்துறை இருக்கும். திருப்பூர் மாநகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். பல்வேறு தரப்பு மக்கள் இருப்பதால் குற்றத்தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் சமூகஇடைவெளியை பின்பற்றுவதில் கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க எப்போது வேண்டும் என்றாலும் காவல்துறையை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடியரசு தலைவர் பதக்கம்

இவர் கடந்த 1995-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக சேர்ந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் போளுர், வந்தவாசி, திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். பின்னர் சென்னை மாநகர போக்குவரத்து உதவி கமிஷனராக பணியாற்றியுள்ளார்.

2016-ம் ஆண்டு டி.ஐ.ஜி. யாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்தில் பணியாற்றினார். பின்னர் கடந்த ஆண்டு முதல் கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார்.

சிறந்த பணிக்காக கடந்த 2017-ம் ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் பெற்றுள்ளார். கோவை சரகத்தில் நக்சலைட்டுகள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் பழங்குடியினர் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்