ஓசூரில் கொரோனாவுக்கு பெண் பலி

ஓசூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சேலம் தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

Update: 2020-07-08 02:05 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகர் கம்பர் தெரு 7-வது கிராசை சேர்ந்தவர் 50 வயது பெண். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த, அந்த பெண் நேற்று இறந்தார். இதையடுத்து அவரது உடலை சுகாதாரத்துறை வழிகாட்டுதல் படி அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செட்டிப்பள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்தார். அதன் தொடர்ச்சியாக ஓசூர் தனியார் நிறுவன கேன்டீன் ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடந்த வாரம் ஓசூரை சேர்ந்த தனியார் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் ஒருவர் சிவகாசி சென்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தற்போது நேற்று 4-வதாக ஓசூரை சேர்ந்த பெண் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்துள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில் 4 பேரில் 3 பேர் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 217 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்