பட்ஜெட் அனுமதி பெறுவதில் காலதாமதம்: சபாநாயகருடன், நாராயணசாமி அவசர ஆலோசனை

சபாநாயகருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-07-13 23:00 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தருவது காலதாமதமாகி வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

பட்ஜெட் அனுமதி

புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டும் கடந்த மார்ச் 30-ந் தேதி 3 மாதத்திற்கான அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்தநிலையில் தற்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக ரூ.9,500 கோடியில் முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் சில திருத்தங்கள் செய்து ரூ.9 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்து வந்தது.

இக்கட்டான நிலை

கடந்த 9-ந் தேதி மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதாக வாய்வழியாக உத்தரவு பெறப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்துவிடும் என கருதி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய கருத்துக்கள் குறித்து அமைச்சரவையை கூட்டி ஆலோசனையும் நடத்தப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்தபடி மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் வரவில்லை. இதனால் அரசுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் முடியாத இக்கட்டான நிலை உருவானது.

ஆலோசனை

இந்தநிலையில் நேற்று இரவு சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அறைக்கு சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அவசரமாக சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி தருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோருடனும் நாராயணசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்றால் சட்டசபையை உடனடியாக கூட்டி 6 மாதம் அல்லது 3 மாதங்களுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ஆதரவும், எதிர்ப்பும்

இதுவரை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தராத மத்திய அரசு மற்றும் கவர்னர் கிரண் பெடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்