கடலோர மாவட்டங்களில் கனமழை: மரங்கள் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதம்

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. காற்றுடன் கூடிய கனமழைக்கு மரங்கள் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதம் அடைந்தன.

Update: 2020-07-17 23:00 GMT
மங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது இந்த மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிணகன்னடா, உத்தரகன்னடா மாவட்டங்களிலும், மலைநாடு பகுதிகளான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. தட்சிணகன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி, புத்தூர், மூடபித்ரி, பண்ட்வால், மங்களூரு, சுள்ளியா தாலுகாக்களில் விடிய, விடிய கனமழை பெய்தது. தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தட்சிணகன்னடா மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கனமழை பெய்தது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். வாகன நடமாட்டமும் குறைவாக இருந்தது. இருப்பினும் சில சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தட்சிணகன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா ஜலசூரு கிராமத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆனால் அந்த வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் சுள்ளியா அருகே பொண்டந்திலா கிராமத்திலும் ராட்சத மரம் முறிந்து ஆஸ்பெட்டா ஷீட்டால் ஆன வீடு மீது விழுந்தது. இதில் அந்த வீடும் பலத்த சேதமடைந்தது. ஆனால் அந்த வீட்டில் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தட்சிணகன்னடா மாவட்டத்தில் நேத்ராவதி, குமாரதாரா, பால்குனி, சவுபார்னிகா, சாம்பவி, சீத்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதுபோல் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர், காபு, கார்கலா, உடுப்பி, பைந்தூர், குந்தாப்புரா தாலுகாக்களிலும் நேற்று கனமழை பெய்தது. மேலும் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார், சிர்சி, பட்கல், முண்டக்கோடு தாலுகாக்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மழை நீடித்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எனவே ஆரஞ்சு அலர்ட் விதித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்