வருமானவரித்துறை பெண் ஊழியர் உள்பட 141 பேருக்கு கொரோனா கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1785 ஆக உயர்வு

வருமானவரித்துறை பெண் ஊழியர் உள்பட 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,785 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-07-18 03:36 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர், ஆர்.ஜி.புதூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, கொடிசியா மையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளது.

செல்வபுரத்தில் 27 பேர்

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனி, சாமி அய்யர் புதுவீதி, தெலுங்குபாளையம், செல்வபுரம் ஹவுசிங்யூனிட் பகுதிகளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்வபுரத்தில் மட்டும் இதுவரை 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செட்டிவீதி கே.சி.தோட்டம் பகுதியை சேர்ந்த 77 வயது மூதாட்டி, கரும்புக்கடை இலாஹி நகர் பகுதியில் 5 வயது சிறுமிகள் 2 பேர், 8 வயது சிறுமி மற்றும் 4 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காந்திமாநகர் பகுதியில் 50 வயது பெண், 24 வயது வாலிபரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

வருமானவரித்துறை ஊழியர்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிய சிலருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று 52 வயது பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை ராமநாதபுரம் கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், நீலிக்கோணாம்பாளையம் வரதராஜபுரத்தை சேர்ந்த 55 வயது பெண், பன்னிமடை தர்மராஜ நகர் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண், சோமையம்பாளையம் ரோகிணி கார்டனை சேர்ந்த 5 வயது சிறுமி, 39 வயது ஆண், போத்தனூர் ஆல்வின் ஜோசப் நகர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், குறிச்சி மாணிக்க சேர்வை வீதியை சேர்ந்த 47 வயது பெண், போத்தனூர், என்.பி. இட்டேரியை சேர்ந்த 15 வயது சிறுமி, வடவள்ளி எஸ்.வி.நகரை சேர்நத 84 வயது முதியவர், 20 வயது பெண், ரத்தினபுரி கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலக ஊழியர்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிய 19 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளைத்தை சேர்ந்த 39 வயது ஆண், 20 வயது ஆண், துடியலூரில் 25 வயது வாலிபர், சூலூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், செஞ்சேரி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 3 பேர், அன்னூர் முதலிபாளையம், மாச்சம்பாளையம், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

1,785 ஆக உயர்வு

நேற்றுடன் சேர்த்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 41 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் ஆண்கள் 16 பேர், கர்ப்பிணிகள் 5 பேர் உள்பட 19 பேர், சிறுமிகள் 2 பேர், சிறுவர்கள் 4 பேர் ஆவார்கள்.

மேலும் செய்திகள்