வியாபாரி, கல்லூரி மாணவரிடம் பண மோசடி

வியாபாரி, கல்லூரி மாணவரிடம் பண மோசடி செய்யப்பட்டது

Update: 2021-09-30 19:48 GMT
திருச்சி
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பிரதீப்(வயது 38). இவர், மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார்.  திருவானைக்காவலில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது கணக்கை ரத்து செய்துவிட்டு, புதிதாக வங்கி கணக்கு தொடங்கினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரதீப் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அந்த மெசேஜில், உங்களது வங்கி கணக்கை சரி செய்ய வேண்டும். அதனால் உங்களது வங்கி கணக்கு எண், ரகசிய குறியீடு எண்ணை அனுப்பி வையுங்கள் என்று இருந்தது.
அதையடுத்து குறுந்தகவல் வந்த எண்ணுக்கு வங்கி கணக்கு எண், ரகசிய குறியீடு எண்ணை பிரதீப் அனுப்பி வைத்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரமும், அடுத்த சில நிமிடங்களில் ரூ.45 ஆயிரம் என மொத்தம் ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கிக்கு சென்று பிரதீப் விசாரித்தார். அதற்கு உங்களது வங்கி கணக்கில் இருந்து நாங்கள் பணம் எதுவும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதையடுத்ததை அறிந்த பிரதீப், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 
கல்லூரி மாணவர்
இதேேபால, திருச்சி அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த முகமது அலியாஸ் மகனும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவருமான அப்துல் ரகுமானிடம்(18) பிளிப்காட் நிறுவன ஆன்லைன் பிரிவில் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்றும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாவும் கூறியதன்பேரில் முதற்கட்டமாக ரூ.24 ஆயிரம், 2-ம் கட்டமாக ரூ.65 ஆயிரத்தை செலுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த வெப்சைட் முடங்கியது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல் ரகுமான், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார்களின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்