சேலம் கோட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 30 குளிர்சாதன வசதி பஸ்கள் இன்று முதல் இயக்கம்

சேலம் கோட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 30 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

Update: 2021-09-30 21:06 GMT
சேலம்
குளிர்சாதன வசதி பஸ்கள்
கொரோனாவின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. இதன் காரணமாக அரசு பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் கோட்டத்துக்குபட்ட சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1,900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று மேலும் குறைந்து வருவதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து சேலம் கோட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள குளிர்சாதன வசதி பஸ்களை பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
30 பஸ்கள் இயக்கம்
குறிப்பாகபஸ்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்பட பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. 
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் கோட்டத்துக்குபட்ட சேலம் மாவட்டத்தில் 28 பஸ்கள், தர்மபுரி மாவட்டத்தில் 22 பஸ்கள் என மொத்தம் 50 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் உள்ளன. அதில் இன்று மதியம் முதல் 30 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
அதாவது, சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 18 பஸ்களும், தர்மபுரியில் இருந்து வெளியூர்களுக்கு 12 பஸ்களும் இயக்கப்படுகின்றன. பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரும் முககவசம் அணிவதுடன் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்