திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை; விளை நிலங்கள் நீரில் மூழ்கின-தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்சி மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், விளைநிலங்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

Update: 2021-10-01 19:30 GMT
மணப்பாறை:

மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடி-மின்னலுடன் விடிய-விடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வடக்கிப்பட்டியை சேர்ந்த ராமசாமிக்கு சொந்தமான பசு மாடு மின்னல் தாக்கியதில் செத்தது. மின்னல் தாக்கியதில் ராமசாமி மனைவி ராமாயி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கே.பெரியப்பட்டி மற்றும் சொக்கம்பட்டியில் உள்ள ஆற்றில் தடுப்பணைகளை தாண்டி மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பலரும் பார்த்து செல்கின்றனர்.
ஜீயபுரம்
திருச்சி மாவட்டம், ஜீயபுரம், கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக விளைநிலங்கள் நீரில் மூழ்கியதால் கடல் போல் காட்சி அளிக்கின்றன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு வாசிகள் போராட்டம்
 மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு அத்திக்குளம் மற்றும் கீரைத்தோட்டம் ஆகிய பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக அந்தபகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் நேற்று தாசில்தார் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மீண்டும் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கால்வாயை முறைப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன் அதற்கான பணியையும் தொடங்கினர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர். அத்திக்குளம்  கீரைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாய் முற்றிலுமாக தூர்ந்து போய் விட்டது. இதனால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளை சூழ்ந்து கொள்ளும் நிலை ஒவ்வொரு முறையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, வாத்தலை, முசிறி, மருங்காபுரி, துறையூர் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மாநகரிலும் பல இடங்களில் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளித்தன. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர். காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் தேங்கி நின்ற மழைநீரில் சிரமப்பட்டு சென்று காய்கறிகளை வாங்கி சென்றனர். இதேபோல் பலத்த மழை காரணமாக உய்யகொண்டான் வாய்க்கால் ஆறுகண் பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் செய்திகள்