பயங்கர ஆயுதங்களுடன் 41 ரவுடிகள் கைது

பயங்கர ஆயுதங்களுடன் 41 ரவுடிகள் கைது;

Update:2021-10-02 01:15 IST
மதுரை
மதுரை நகரில் கடந்த 6 நாட்களில் போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் 41 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
 தேடுதல் வேட்டை
மதுரை நகரில் குற்றச்சம்பவங்களை குறைக்க ஆபரேஷன் டிஸ்ஆம் எனும் தேடுதல் வேட்டை போலீசாரால் நடத்தப்பட்டது. அதன்முடிவில் ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை நகரில் ரவுடிகளின் செல்பாடுகளை கட்டுப்படுத்தவும், முன்விரோத குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கடந்த 23-ந் தேதியில் இருந்து 28-ந் தேதி வரை மாநகர போலீசாரால் ஆபரேஷன் டிஸ்ஆம் என்னும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில் கடந்த 6 நாட்களில் 1,157 ரவுடிகள் பட்டியில் கொண்ட குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் அவர் தங்கும் இருப்பிடங்களில் தீவிர தேடுதல் பணிகளை போலீசார் ஈடுபட்டனர். அப்போது முக்கிய குற்றவழக்குகளில் தொடர்புடைய 41 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 20 வாள், 24 கத்தி, 5 அரிவாள் உள்பட மொத்தம் 49 பயங்கர ஆயுதங்கள் பறிமுதுல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதவிர நடப்பாண்டில் குற்ற பின்னணி உடைய 1250 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டது. அந்த பிணையத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட 108 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களில் 48 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடையில் கண்காணிப்பு கேமரா
குற்றவாளிகளின் தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக கத்தி, வாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் தயாரிப்பவர்கள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு காவல் சரகத்திலும் கூட்டம் நடத்தப்பட்டு பட்டறை மற்றும் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும் ஆயுதங்கள் வாங்க வருபவரின் பெயர், முகவரி, கைப்பேசி எண்கள், என்ன காரணத்திற்காக வாங்குகிறார்கள் என்ற விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும் அடையாளம் தெரியாதவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்