சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு
சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோட்டூரில் சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாலையை அகலப்படுத்த கோரிக்கை
பொள்ளாச்சி வால்பாறை ரோடு அங்கலகுறிச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் லாரி, பஸ் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சாலையை அகலப்படுத்துவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்டூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லாரியை வேகமாக இயக்கி, சாலையின் அதிர்வை நவீன கருவி மூலம் பதிவு செய்தனர். இந்த ஆய்வு- பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உசேன், சாலை ஆய்வாளர் கனகராஜ் மற்றும் பணியாளர் ஈடுபட்டனர்.
ஆனைமலை-பூலாங்கிணறு சாலை
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விபத்துகளை தடுக்க குறுகலான சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது அங்கலகுறிச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் சாலை 5½ மீட்டர் அகலம் உள்ளது. இந்த சாலையை 1½ மீட்டர் கூடுதலாக அகலப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று 5½ மீட்டர் அகலம் உள்ள ஆனைமலை-பூலாங்கிணறு சாலையும் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக லாரியை வேகமாக இயக்கி சாலையின் அதிர்வு கணக்கிடப்பட்டது. எவ்வளவு அதிர்வு பதிவாகிறது என்பதை வைத்து சாலையின் தரம் மேம்படுத்தப்படும். மேலும் சாலையை அகலப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தும் சாலை பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.