பொள்ளாச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்;

Update:2021-10-04 22:12 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு மனுக்கள் குவிந்தன. 

குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது டி.கோட்டாம்பட்டி மகாலட்சுமி நகர், கிருஷ்ணசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் நீண்டகாலமாக தூர்வாராமல் இருந்த குளம் தூர்வாரப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் சேகரமாகும் அனைத்து நீரும் குளத்திற்கு வந்து சேரும். இதற்கிடையில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல் விட்டு சென்றதால், இந்த திட்டத்தின் நோக்கம் வீணாகி விடுகிறது. மேற்கு பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் வழியாக அதிகமான நீர் வெளியேறும். இதற்கிடையில் தனியார் தோட்டத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் குளத்தை மட்டும் தூர்வாரி விட்டு, பாலத்தை தூர்வாரவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த சிறிய பாலத்தை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நூலகத்தை காணவில்லை

முன்னாள் கவுன்சிலர் வக்கீல் அய்யப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி மரப்பேட்டை வீதி நகராட்சி பூங்கா அருகே செயல்பட்டு வந்த மத்திய நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து நூல்களை வாசித்து வந்தேன். கடந்த ஒராண்டாக மேற்கண்ட நூலகத்தை காணவில்லை. நூலகத்தின் பெயர் பலகை கூட கண்ணுக்கு தெரியவில்லை. பொள்ளாச்சியில் புதிதாக அமைந்திருக்கும் நகராட்சி, தாலுகா, அரசு கலைக்கல்லூரி மற்றும் கோர்ட்டு வளாகம் போன்ற அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் நூலகத்தை காணவில்லை. நூலகத்தை கண்டுபிடித்து தருமாறு பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். கடந்த 60 ஆண்டுகளாக பொள்ளாச்சி நகர வாசகர்களின் வாசிப்பு மையமாக சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் செயல்பட்டு வந்த நூலகத்தை காணவில்லை. எனவே நூலகத்தை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர். மேலும் கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இடம் ஒதுக்கீடு செய்ய கோரி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்