கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

18 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.;

Update:2021-10-05 03:33 IST
மதுரை,

18 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

 குறைதீர்க்கும் முகாம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் 18 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் குறைதீர்க்கும் முகாமுக்கு பொதுமக்கள் நேரில் மனுக்கள் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அவர்களை போலீசாரும், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வரிசையாக நிற்க வைத்து மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். ஆனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், சிலர் முககவசம் அணியாமலும் அங்கு நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கலெக்டரிடம் நேரில் கொடுத்தனர்.

ஜல்லிக்கட்டு
 தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய மாநில தலைவர் முடக்காத்தான் மணி தலைமையில் மாடுபிடிவீரர்கள், காளை உரிமையாளர்கள் என பலர் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஜல்லிக்கட்டு குறித்து பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை, ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.
அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் தியாகராஜன் திருநீலகண்டர் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், குலாலர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். எங்கள் சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மண்பாண்ட நலவாரியத்தில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்களை இடம் பெற்று இருந்தன.

சொத்துகளை மீட்க கோரிக்கை

மதுரை பொன்மோனி, சொக்கலிங்க நகர் 7-வது தெருவை சேர்ந்த பூர்ணம்மாள் (வயது 71) என்பவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் எனது கணவர் சண்முகமும், நானும் முறுக்கு வியாபாரம் செய்து பல்வேறு ெசாத்துகளை சேர்த்து உள்ளோம். எங்களுக்கு 3 மகன்கள். கணவர் இறந்த பிறகு 3 மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன். அவர்கள் என்னை  ஏமாற்றி என்னிடம் இருந்த சொத்துகளை வாங்கி கொண்டனர். அதன்பின்பு என்னை பராமரிக்காமல் விட்டு விட்டனர். எனவே என்னுடைய சொத்துகளை மீட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இவ்வாறு பலதரப்பட்ட மனுக்களை மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் பெற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்