மதுரையில் பலத்த பாதுகாப்பு; அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

Update: 2017-01-15 04:06 GMT


மதுரை,

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. 

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலையே நீடிக்கிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினரும் வருவது வாடிக்கை. இப்படி உலகப்பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டாக பீட்டா எதிர்ப்பு - உச்ச நீதிமன்றம் தடை காரணமாக நடைபெறவில்லை.

இந்த ஆண்டு போட்டியை எப்படியும் நடத்தியே தீரவேண்டும் என பலதரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் பல்வேறு மாவட்டங்களிலும் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் என அனைவரும் நினைத்த நிலையில் மாறாக ஜல்லிக்கட்டு விஷயத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. 

இதனால் ஜல்லிக்கட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

யார் தடை விதித்தாலும், அதனைமீறி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்துவோம் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
 
இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பொங்கல் பாண்டிகைக்கு முதல் நாள் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு திடல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதற்கிடையே போராட்டங்களும் தொடர்ந்தது. அவனியாபுரத்தில் நடந்த ஊர்வலத்தின்போது, போலீசார் தடியடி நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த சூழலில் அலங்காநல்லூர் காட்டு பகுதியில் இன்று அதிகாலை காளைகளும், மாடுபிடி வீரர்களும் திடீரென திரண்டனர். அங்கு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயன்றனர். ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் தகவல் கிடைத்து போலீசார் அங்கு வந்தனர்.

 அவர்கள் அவிழ்த்து விட தயாராக இருந்த 10 காளைகளை மடக்கி திருப்பி அனுப்பினர். கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
 
முடக்கத்தான் கண்மாய் 

மதுரை முடக்கத்தான் கண்மாயில் வாடிவாசல் போன்று மேடை தற்காலிகமாக அமைக்கப்பட்டு இன்று 10-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அங்கு போலீசார் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், சிராவயல் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு - பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பாலமேட்டில் கறுப்பு கொடி

பொங்கல் பண்டிகையின் மறுதினம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு போட்டி நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி உள்ளனர். கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து வாடிவாசல் வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. கிராம மக்கள் மற்றும் மடத்துக்கமிட்டி சார்பில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர். நேற்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, குறவன்குளம் ஆகிய இடங்களில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதில் கலந்துகொண்ட காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்த தகவல் தெரிந்த போலீசார் உடனடியாக ஜல்லிக்கட்டு நடந்த இடத்திற்கு வந்து அங்கிருந்தவர் காளை விரட்டினர். பின்பு இதேபோல் மற்ற கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்